
பல ஆண்டுகளுக்கு முன் அன்னை எனும் திரைப் படம் வந்திருந்தது. அதில் தாய் அன்பைக் காட்டும் ஒரு காட்சி. இதில் வளர்ப்புத் தாயாக நடித்தவர் பெரும் நடிகை பானுமதி அவர்கள். நோய் வாய்ப்பட்டு அவள் மகன் தூங்குகின்றான். அன்னைப் பானுமதிக்கு அவன் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்ற கவலை. மகனைக் கவனிக்கும் தாதியை அவள் காலணிகளைக் கலையுமாறு பணிக்கின்றாள். காலணி ஓசை அவன் தூக்கத்தைக் கலைந்து விடுமெனத் தாய் மனம் தவிக்கின்றது.
மணிக் கூட்டின் "டிக் டிக்" ஓசை கேட்கின்றது. அந்த ஓசை தன் அன்பு மகனின் தூக்கத்தைக் குழப்பி விடுமெனத் தவிக்கின்றாள். அதனால் மணிக் கூட்டையே நிறுத்தி விடுகின்றாள்.
இப் படத்தின் இயக்குனர் கிருஸ்ணன் பஞ்சுவின் கூர்மையான உணர்வுக்கு இது ஒரு நல்ல சான்று.
இந்த இனிய உணர்வை வாழ்வில் அநுபவித்தவன் நான். அப்போது பதினேழு, பதினெட்டு வயது இருக்கும் எனக்கு. கூவக் கட்டு என்று நாங்கள் சொல்லுவோம். இந்த நோய் எனக்கு வந்திருந்தது. கன்னம், தாடை எல்லாம் வீங்கி இருக்கும். காதடியில் வலிக்கும். உண்பது கடினம். என் தாயார் மிகுந்த கவலையோடு இருந்தார். கெட்ட தெய்வங்கள் என்னை நெருங்கக் கூடாது என்று என் கழுத்திலே மெல்லிய தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்திருந்தார். தெய்வங்களில் கூடக் கெட்ட தெய்வம் நல்ல தெய்வம் இருக்கின்றதா என்பது வேறு.
பாதித் தூக்கம். பாதித் தளர்வு. நான் கண்களை மூடி இருந்தேன். அருகில் இருந்த என் தாயின் கரம் அந்தச் சங்கிலியைத் தொடுவதும், விடுவதுமாக இருந்தது. அவள் முகத்தில் தவிப்பு.
"என்னம்மா செய்யிரீங்கள்? " எனக் கேட்டாள் என் தங்கை.
" கழுத்தடி வீங்கி இருக்கு. அவனுக்கு அந்தச் சங்கிலி பட நோகுமே?" எனறார் என் தாயார்.
அந்த மெல்லிய சங்கிலி பட்டே எனக்கு நொந்து விடுமே என்று என் தாய் மனம் தவித்ததை நினைத்து என்னை அறியாது கண்ணீர் கசிந்தது.
"பார்த்தியே, பார்த்தியே. அவனுக்கு நோகுது" என்றவாறு என் தாயார் சங்கிலியைக் கழட்டினார்.
நெஞ்சிலே நிறைந்து விட்ட ஒரு நினைவு.
9 comments:
வாங்க நித்தியகீர்த்தி.
நல்லதொரு பதிவோடு தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
-மதி
மதி,சக்தி,
இது எனக்கு ஆரம்பப் பள்ளி. மதியும் தேவைப்படுகின்றது. சக்தியும் தேவைப்படுகின்றது. தரும் ஊக்கததிற்கு நன்றி. links போடத் தெரியவில்லை. நேரடியாக உங்களுக்கு எழுதவும் தெரியவில்லை. மிக்க நன்றி.
நித்தியகீர்த்தி
மிக அருமை நித்தி. நிறைவான பதிவு.
-டண்டணக்கா
அன்னை படம் ரொம்ப காலத்துக்கு முன்னாலே வந்த படமாச்சே. ஆக உங்களுக்கு வயசு...
உங்கள் தாயின் அன்பு தாராளம்
பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று
பூக்காமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
கனிந்து விட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா
நடிகை பானுமதி நடித்துப் பாடிய மீதி வரிகள் நினைவில்லை :-((
நித்தியகீர்த்தி neengal koduthu vaithavar.
தாயின் அன்பும், அதை நீங்கள் எழுதிய விதமும் மனதைத் தொடுகின்றன.
லதா, நீங்கள் கேட்டதற்காக, இதோ முழுப்பாடலும்...
பூவாகிக் காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில்
தேனாறு பாயுதடா
கனிந்துவிட்ட சின்னமரம்
கண்ணீரில் வாடுதடா
பெற்றெடுக்க மனமிருந்தும்
பிள்ளைக் கனியில்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு
மற்ற சுகமில்லை
சுற்றமெனும் பறவையெல்லாம்
குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டி தாலாட்டும்
பேரு மட்டுமில்லை
வேண்டுமென்று கேட்பவர்க்கு
இல்லை இல்லை என்பான்
வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும்
அள்ளி அள்ளித் தருவான்
ஆண்டவனார் திருவுளத்தை
யாரறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார்
யாரறிவார் கண்ணே
அன்புள்ள அனானிமஸ்,
நன்றி
Post a Comment